ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன் என்ற மோடி.. ராகுல் உருக்கமாக டிவிட்டரில் பதில்

மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சித்தது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, இறந்து போன என் தந்தையைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்களை மனதில் புதைத்துள்ள உங்களுக்கு அவரது ஆன்மா தக்க தண்டனை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று டிவிட்டரில் பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஒரு கட்டத்தில் நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி திருடன் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து திடீரென ஊழல் புகார் வாசித்தார். எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தில் என்னை குற்றம்சாட்டி வருகிறார்.

உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிறக்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என ராகுல் காந்தியுடன் தம்மை ஒப்பிட்டு பிரதமர் மோடி கூறினார்.

மறைந்த ராஜீவ் காந்தி மீது போபர்ஸ் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அதில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், திடீரென பிரதமர் மோடி தற்போது இந்தக் குற்றச்சாட்டை கூறியது காங்கிரஸ் கட்சியினரையும், ராகுல் காந்தியையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

மோடியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று டிவிட்டர் பதிவில், மோடி ஜி, நமக்கிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. என் தந்தையைப் பற்றி தாங்கள் உள் மனதில் வைத்திருந்ததை வெளிப்படுத்தி விட்டீர்கள். அதற்கான பலனை (கர்மா) தாங்கள் அனுபவிக்கும் நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

More News >>