9 முறை தாக்கப்பட்டேன்... கொடுமைடா சாமி..! கெஜ்ரிவால் வேதனை
கடந்த 5 ஆண்டுகளில் 9 முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். ஒரு முதல்வரான எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரம் எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது வெளியில் தாக்குதலுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது. அவரை தாக்குவது, மையை ஊற்றி அசிங்கம் செய்வது சகஜமாகி விட்டது. நேற்றும் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த கெஜ்ரிவாலை, வாகனம் மீது ஏறி இளைஞர் ஒருவர் பளார் என அறை விட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.
இவ்வாறு கெஜ்ரிவால் மீது தாக்குதல் தொடுப்பது பாஜக தான் என்று ஆம் ஆத்மி கட்சியினர் பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில், இந்த தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 9 முறை என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிலும் முதல்வராை பின் 5 முறை தாக்கப்பட்டுள்ளேன். இந்திய வரலாற்றில் இப்படி அதிக முறை வேறு எந்த முதல்வரும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். அதிலும் டெல்லி முதல்வர் ஒருவருக்குத்தான், அவருடைய பாதுகாப்பை கவனிக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பது மிகக் கொடுமையானது என்று கெஜ்ரிவால் டிவிட்டரில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முதல்வராக கெஜ்ரிவால் இருந்த போதும், அவருக்கு போதிய அதிகாரங்கள் கிடையாது. டெல்லியில் காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முழு அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களையும் கெஜ்ரிவால் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.