பார்வதியின் துணிவுக்கு ஒரு சல்யூட்... உயரே விமர்சனம்
உயரே! இது பெண்களுக்கான சினிமா. பெண்களின் வலியை, உணர்வுகளை, அநீதிகளை பேசியிருகும் சினிமா இந்த உயரே. வித்தியாசமான கதைகளில் தன்னை உட்புகுத்திக் கொள்ளும் பார்வதியின் புதிய பரிணாமமான உயரே எப்படி இருக்கிறது? பல்லவி ராஜேந்திரனின் (பார்வதி) கனவு, வாழ்க்கை, சந்தோஷமே கதைக்களம். சிறு வயதிலேயே விமானியாக வேண்டுமென்று ஆசைப்படுகிறார் பல்லவி. பல்லவிக்கு விமானியாவது மட்டுமல்ல, கல்லூரி பருவத்தில் கோவிந்த் மீது காதலும் மலர்கிறது. பல்லவி மீதான அன்பு, அளவுக்கு அதிகமாகி அதுவே பல்லவிக்கு வினையாக மாறுகிறது. கல்லூரியில் நடனமாடுவது, எல்லோரிடமும் சகஜமாக பேசுவது, விமானி பயிற்சிக்காக மும்பை செல்வது என பல்லவியின் எந்த நகர்வும் கோவிந்துக்கு சந்தேகத்தையும், எரிச்சலையுமே தருகிறது. ஒரு கட்டத்தில் பல்லவி முகத்தில் ஆசிட் வீசிவிடுகிறான் கோவிந்த். அதனால் கண் பார்வையில் ஏற்படும் கோளாறால் விமானி கனவு பல்லவிக்கு சுக்கு நூறாகிறது. அதன்பிறகான பல்லவியின் வாழ்க்கை எப்படியானது, உடைந்து விழுந்த பல்லவி நிமிர்ந்து நடைபோட்டாளா? என்னவானது கோவிந்த் வாழ்க்கை என்பதே மீதிக் கதை.
பல்லவியாக பார்வதி ஒவ்வொரு காட்சியிலும் அழகாக தெரிகிறார். கோவிந்த் மீதான காதலுக்கு இவர் கூறும் நீயாமமாகட்டும், தந்தை சித்திக் மீதான அன்பு, விமானியாக வேண்டும் என்கிற கனவு ஏன அனைத்து இடங்களிலும் நடிப்பில் டாப் கியரில் செல்கிறார் பார்வதி. இவரை நடிகை என்ற ஒரு வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. சமூகம் சார்ந்த பொருப்பும் அறிவும் கொண்ட ஆளுமையாக தான் பார்க்கவேண்டி இருக்கிறது. அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பார்வதி நிச்சயம் படத்தில் உயர பறந்திருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீறும் இரண்டு வித ஆண்கள் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ஆசிப் அலி மற்றும் டொவினோ தாமஸ் இருவருமே நடிப்பிலும் அபாரம். பல்லவியின் கனவை அடித்து நொறுக்கும் ஆசிப், அதே பல்லவிக்கு புதிய கனவுகளை தரும் டொவினோ என இரண்டு கேரக்டரிகளின் முரணும், நகர்வும் படத்தின் தன்மைக்கு வலுசேர்க்கிறது.
பார்வதி மீது ஆசிட் வீசும் இடமாகட்டும், அன்பின் மிகுதியில் அழும் இடமாகட்டும் ஆசிப் அலி நடிப்பில் உச்சம் தொடுகிறார். திரையில் ஆசிப் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் நடிப்பில் அவருக்கான பங்கினை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். இந்தியாவில் இருக்கும் முக்கால் வாசி ஆண்களின் முக பிரதிபலிப்பாகவே வந்துபோகிறார் ஆசீப் அலி. வாழ்த்துகள். ஒரு நடிகைக்கு முக அழகு ரொம்பவே முக்கியம். ஆனால் ஆசிட் வீச்சுக்கு பாதிக்கப்படும் பெண்ணாக, கோரமான முகத்துடன் பிற் பாதி முழுவதும் வருகிறார் பார்வதி. இப்படியான ஒரு காட்சியில் நடித்த பார்வதியின் துணிவுக்கு ஒரு சல்யூட். பார்வதியை ஆளுமை என்று கூறிதற்கான காரணமும் இது தான். அன்பே சிவம் படத்தில் கமலுக்குப் பிறகு, இப்படியான கோர முகத்துடன் நடித்த மற்றொரு நடிகராக இவரைத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது. ஆசிட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கெல்லாம் சோர்ந்துவிடாமல் மீண்டும் புதிய உலகை தேடும் இடமாகட்டும், இவரைப் பார்த்து குழந்தை அழும் இடங்கள், ஆசிப் முகத்தில் தண்ணீரை ஊற்றும் இடமென்று அனைத்துமே உணர்வின் உச்சம். படத்திற்கு கோபி சுந்தரின் இசையும், மகேஷ் நாராயணனின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்க்கிறது. நோட் புக், ஹவ் ஓல்டு ஆர் யூ படங்களுக்கு கதை எழுதிய பாபி சஞ்சய் தான் இப்படத்தின் கதையும் எழுதியுள்ளார். படத்தின் சின இடங்கள் சினிமா தனத்துடனும், முதிர்ச்சியற்ற கிளைமேக் காட்சியும் இருந்தாலும் ஒட்டு மொத்த படமாக சிறப்பான அனுபவத்தை தருகிறது உயரே. பெண்கள் மீதான அநீதி, சமூக பிரச்னையை பேசியிருக்கும் இப்படம் நிச்சயம் உயர பறக்கும் விமானம் போல தான். நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள சினிமா உயரே.