தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் Vs உச்ச நீதிமன்றம் ... மோதல் வெடிக்குமா..?

தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இது போன்று முன்னர் நடந்த பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர்கள் பலர் அலட்சியம் செய்த நிலையில், இந்த வழக்கிலும் சர்ச்சை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில், அவர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று திமுகவும், இதையே காரணமாகக் கூறி எம்எல்ஏக்கள் மூவரும் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன மாதிரி வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால், அதை அவர் ஏற்பாரா? என்ற கேள்விகளும் இப்போது எழுந்துள்ளன.

ஏனெனில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது. சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. நீதிமன்றங்களின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்று பல மாநிலங்களின் சபாநாயகர்கள் எதிர்ப்பு தெரிவித்த முன்னுதாரணங்கள் பல உள்ளன.

1986-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, எம்எல்ஏக்களை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக ஆனந்த விகடன் ஆசிரியரை கைது செய்ய உத்தரவிட்டார் அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட போது தான், தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்று முழங்கினார் பி.எச்.பாண்டியன். அதன் பின் தற்போது சபாநாயகராக உள்ள தனபால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த போதும் நீதிமன்றம் அதனை செல்லும் என்றே கூறி விட்டது. எடப்பாடி அரசுக்கு எதிராக ஓட்டளித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்காமல் இழுத்தடிப்பதற்கும் சபாநாயகர் vs நீதிமன்றம் மோதல் வந்து விடக் கூடாது என்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று 3 எம்எல்ஏக்கள் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் என்ன மாதிரி உத்தரவிடப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால், சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வந்தால், சர்ச்சை நிச்சயம் வெடிக்கும் என்றே கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசு வேலை ... தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை ..! மு.க.ஸ்டாலின் உறுதி
More News >>