ராஜஸ்தானில் கோர விபத்து: உயிர்தப்பினார் பிரதமர் மோடியின் மனைவி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், உடன் பயணித்த உறவுப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென். இவர், மெக்சானா மாவட்டத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜசோதா பென் தனது உறவுக்கார பெண் வசந்த்பாய் மோடியுடன் இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டனர். பின்னர், அங்கிருந்து வீடு திரும்புகையில், சிட்டிகார் என்ற மாவட்டத்தில் திடீரென கார் விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில், வசந்த்பாய் மோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பிரதமர் மோடியின் மனைவியான ஜசோதாபென் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜசோதாபென்னை மீட்டு சிட்டிகாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.