ஹாலிவுட்டை கிடுகிடுக்க வைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் வசூல் சாதனை ஹாலிவுட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படத்துக்கு உலகமெங்கும் பெரிய அலை வீசியது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் நான்காவது மற்றும் கடைசி சீரிஸூம், மார்வெலின் 22வது படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை வெளியாகி பூர்த்தியும் செய்தது அவெஞ்சர்ஸ். இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் முந்தைய ஹாலிவுட் படங்களின் வசூலை முறியடித்துள்ளது. இரண்டே வாரங்களில் 2 பில்லியன் டாலர் வரை வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது குறுகிய காலத்தில் 2 பில்லியனை எட்டிய படமும் இதுவே. ஹாலிவுட்டின் வசூல் பட்டியலில் டைடானிக் படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தையும் முறியடித்து வசூல் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்கிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். அதவார் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 2.78 பில்லியன். இந்த வசூலை அடைய அவதார் படத்துக்கு 50 நாட்கள் ஆனது. ஆனால் வெளியான 11வது நாளிலேயே 2 பில்லியனை எட்டியிருக்கிறது அவெஞ்சர்ஸ். எனவே எளிதில் அவதாரை முந்தும் எனவும், 3 பில்லியனை எட்டவும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 350 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 300 கோடி கிளப்பில் இணைந்திருக்கும் ஹாலிவுட் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் இதுவே வசூலில் டாப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.