தன்மானம்... ரோஷம்... இருந்தா ராஜினாமா பண்ணுங்க...! மோடியால் அசிங்கப் பட்ட தேர்தல் ஆணையம்

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தான் இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது. பிரதமர் மோடி செயல்பாடுகள், பேச்சுக்கள் எதிலும் தேர்தல் நடத்தை விதி மீறல் எதுவுமில்லை என்று நற்சான்று வழங்கிய தேர்தல் ஆணையத்தை கார்ட்டூன்களாக வரைந்து, கொஞ்சமாவது மான, ரோஷம் இருந்தா இதப் பார்த்த பிறகாவது ராஜினாமா செஞ்சுட்டுப் போங்க என்று பிரபல அரசியல் ஆய்வாளரும், ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவருமான யோகேந்திர யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்புகள் பலவும் பலவீனமாகி பாஜகவின் ஒரு அங்கம் போல் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகின்றன. அதிலும் மக்களவைப் பொதுத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் தான் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டலுக்கும் ஆளாகி விட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய ராணுவத்தின் வீர தீரங்கள், பாஜகவுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் தொடர்ந்து பேசி வருகிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சியினரையும் எல்லை கடந்து சரமாரியாக விளாசும் மோடி, 28 ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளின் குண்டுக்கு இரையான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விட்டு வைக்கவில்லை.

மிஸ்டர் கிளீன் என்று கூறப்படும் ராகுல் காந்தியின் தந்தையான ராஜீவ் காந்தி மறைந்த போது நம்பர் 1 ஊழல்வாதியாகத்தான் மறைந்தார் என்று மோடி கூறியது, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி நடுநிலையாளர்களையும் அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. ஏனெனில் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றமே ராஜீவை குற்றமற்றவர் என கூறிய நிலையில், அவரை நம்பர் ஒன் ஊழல்வாதி என மோடி விமர்சித்தது வெறும் தேர்தல் ஆதாயத்திற் குத்தான் என்றும், இவ்வாறு நடத்தை விதிகளை மீறும் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்தப் புகார்களை எல்லாம் விசாரிப்பதாக கண் துடைப்புக்கு நாடகம் போட்ட தேர்தல் ஆணையம் , பிரதமர் மோடியின் பேச்சில் எந்த விதி மீறலும் இல்லை என்று இப்போது சர்டிபிகேட் கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கை கடுமையாக சாடியுள்ள அரசியல் ஆய்வாளரும், ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவருமான யோகேந்திர யாதவ், டிவிட்டரில் கார்ட்டூன்களாக வரைந்து தள்ளி விமர்சனமும் செய்துள்ளார்.

அதில் தலைமை தேர்தல் ஆணையர் மிஸ்டர் சுனில் அரோரா ... இந்தக் கார்ட்டூன்களை பார்த்து யாருக்காவது கொஞ்சமேனும் தன்மானம், ரோஷம் இருந்தா இந்நேரம் ராஜினாமா பண்ணிட்டு போயிருக்கணும் என்று பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று பிரபல ஆங்கில நாளிதழ்களும் மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் இணைந்து கிண்டல், கேலி கார்ட்டூன்களை ஏகத்துக்கும் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>