தேனி ஓட்டு மிஷினில் தில்லு முல்லா..? என்னமோ நடக்குது... எல்லாமே மர்மமா இருக்குது...!
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்து முடிந்த 38 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அனைவரின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதி தேனி. இங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.விகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஓ.பி.எஸ்.சின் பரம வைரியான தங்க. தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டதால் தேர்தல் களம் படு சூடாகிக் கிடந்தது. அது மட்டுமின்றி தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டதால், தேனியில் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என முக்கியத் தலைவர்கள் பலரும் இங்கு ஸ்பெஷலாக பிரச்சாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இங்கு ஓட்டுப்பதிவு முடிந்து, தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, கோவையில் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், மறு வாக்குப்பதிவு எங்கும் நடைபெற உத்தரவிடப்படாத நிலையிலும், வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது ஏன்? என்ற சந்தேகம் வந்து விட்டது.
இதனால் திமுக, காங்கிரஸ் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என அனைத்து எதிர்க்கட்சியினரும் திரண்டு பெரும் போராட்டம் நடத்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிகாரிகளோ, வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதற்கான முறையான பதில் கொடுக்கத் திணறி ஏதேதோ காரணம் கூறி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் , மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரோ, இப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது வழக்கமான நடைமுறை தான் என்றும் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வாய்ப்பிருபதால் கொண்டு வரப்பட்டதாக ஏதேதோ புதிய காரணங்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்க்கின்றனர் என்று எதிர்க் கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.
ஓட்டு எண்ணிக்கைக்கான நாள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில், இப்படி திடீரென வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்தது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடைசி நேரத்தில் எந்திரங்களை மாற்றி தில்லு முல்லு ஏதும் நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ள கட்சியினர், முறையான விளக்கம் கோரி வலியுறுத்தி வருவதுடன், தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்ற கதவுகளைத் தட்டவும் தயாராகி வருன்றனர்.
தன்மானம்... ரோஷம்... இருந்தா ராஜினாமா பண்ணுங்க...! மோடியால் அசிங்கப் பட்ட தேர்தல் ஆணையம்