எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன்..! டிடிவி தினகரன் தகவல்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் கோவை சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி. தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஏகத்துக்கும் விளாசித் தள்ளினார். தினகரன் பேசுகையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், எப்போதும் துரோகக் கூட்டத்திற்கு துணை நிற்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அம்மா மறைவிற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகத் தொடரட்டும் என நினைத்து முதலமைச்சராக்கினோம். ஆனால் அவரோ பாஜகவின் ஏஜென்டாக வே செயல்பட்டார்.
அதன்பிறகுதான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம்.சிறைக்குச் செல்லும் முன்பு கூட, சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராகத் தேர்வு செய்திருக்க முடியும். ஆனால், பதவிக்காக நாங்கள் ஆசைப்படுபவர்கள் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி போல எப்படி தவழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்று எல்லோக்கும் தெரியும். பதவியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என அவர்கள் செய்தது ராஜ தந்திரமா? அரசியலில் அடுத்தடுத்த பதவிகளை அடைய வேண்டும். முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் பதவி வெறி இருக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் பதவி வெறி காரணமாகத்தான் இப்போது இடைத்தேர்தல் வந்தது.
சூலூரில் இடைத்தேர்தல் நடக்கிறதென்றால், அது நியாயம். இந்தத் தொகுதி எம்.எல்.ஏ இறந்துவிட்டார். ஆனால், மற்ற தொகுதிகளில் ஏன் இடைத்தேர்தல்? இதற்குக் காரணம் எடப்பாடி பழனிச்சாமி அன்கோ தான்.
இதற்கு முன்னால் இருந்த முதல்வர்களெல்லாம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இருக்கும் எம்எல்ஏக்களையும் நீக்குகிறார். எதையாவது செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் நோக்கம்.
தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்துள்ளார். துரோகத்திற்கு துணை போகமாட்டோம் என நிரூபிக்க சூலூர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.மறைந்த ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்து, குஜராத் மோடியா? இல்லை தமிழகத்தின் இந்த லேடியா? என்று சவால் விட்டார் .ஜெயலலிதா யாருடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்றாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து விட்டார்கள்.இப்போது அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது. அதனால்தான், என் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்க நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.
இதனால் எடப்பாடி இப்போது எங்கே சென்றாலும் நோட்டீஸ் பழனிச்சாமி என்றுதான் சொல்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களைக் குறைத்து, சட்டத்தில் உள்ள பொந்துகளின் மூலம் முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். 23-ந் தேதிக்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
185 பக்க நோட்டீஸ் ..! சமரசமா..? பிடிவாதமா..? என்ன பதில் சொல்வது...! குழப்பத்தில் 3 எம்எல்ஏக்கள்