மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யணும் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
மதுரையில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் வரிசை கட்டத் தொடங்கின. முதலில் சித்திரைத் திருவிழா நாளில் தேர்தலை நடத்த எதிர்ப்பு கிளம்பி, தேர்தல் தேதியை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அடுத்து புனித வெள்ளி, பெரிய வியாழன் பிரார்த்தனைகள் பாதிக்கும் என்று கிறிஸ்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு வழியாக தேர்தல் நாளில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்து தேர்தல் நடந்து முடிந்தது. அப்படியும் மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து விட்டது. அதன் பின் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரமும் பெரும் பிரச்னையாக வெடித்தது.
இந்தப் பிரச்னையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததை ஒத்துக் கொண்ட தேர்தல் ஆணையம் , உயர் நீதிமன்றத்தின் கடும் கடும் கண்டனத்துக்கும் ஆளானது. கடைசியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மதுரையில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பெருமளவில் பண வினியோகம் செய்யப்பட்டது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல், சித்திரைத் திருவிழாவால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது போன்ற காரணங்களைக் கூறி, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் கே.கே.ரமேஷ் முறையீடும் செய்தார்.
இதற்கு உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதனால் மதுரை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுள்ளது.
தேனி ஓட்டு மிஷினில் தில்லு முல்லா..? என்னமோ நடக்குது... எல்லாமே மர்மமா இருக்குது...!