தேனி வாக்கு எந்திர விவகாரம் ஓபிஎஸ் தான் காரணம்...! அடித்துச் சொல்கிறார் ஈ.விகேஎஸ்!
தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில் நேற்று இரவோடு இரவாக வந்திறங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதிகாரிகள் தரப்பில் முன்னுக்குப் பின் முரணாக விளக்கம் கொடுத்தது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதிகாரிகளை முற்றுகையட்டு இரவில் பல மணி நேரம் எதிர்க்கட்சியினர் வாக்குவாதம் செய்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசரமாக இன்று காலை தேனி வந்தார்.
மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவைச் சந்தித்த இளங்கோவன், இரவில் கொண்டு வந்த வாக்கு எந்திரங்களை உடனடியாக தேனியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இத்தனை வாக்கு எந்திரங்களை கோவையில் இருந்து இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அண்மையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வாரணாசி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வந்தார். அங்கு அவர் கை, காலில் விழுந்து இந்த தில்லு முல்லு யோசனைக்கு அனுமதி வாங்கி வந்துள்ளார் என்று தெரிகிறது. வாக்குப்பெட்டியை மாற்றவே இந்த சதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கு ஒத்துழைக்கக் கூடாது.
மேலும் தேனி தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை. இரவில் கொண்டுவரப்பட்ட 50 வாக்கு எந்திரங்களையும் உடனே திரும்பக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!