நான் இன்னும் படிக்கல பாஸ்... - வயது விவகாரத்தில் மழுப்பல் பதில் கொடுத்த ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ``தி கேம் சேஞ்சர்" என்ற பெயரில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். அதில் கிரிக்கெட் போட்டிகளின் போது தாம் எதிர்கொண்ட சவால்கள், அணி வீரர்களின் தேர்வு, மற்ற நாடுகளின் வீரர்கள் பற்றியும் முக்கிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார். எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற அப்ரிடி இதிலும் பல சர்ச்சை கருத்துகளை வெளியிட தவறவில்லை. இதில் 1996-ம் ஆண்டு நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தது குறித்து அவர் தெரிவித்திருந்திருந்த தகவல் தான். இந்தப் போட்டியின் போது அப்ரிடிக்கு வயது 16. ஆனால் ``அப்போது தனக்கு வயது 16 கிடையாது. 19 வயது. நான் 1975ல் பிறந்தவன்" என அந்த சுயசரிதையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார் அப்ரிடி. அதில், ``என்னைப் பற்றி எல்லாவற்றையும் எனது ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புத்தகம் எழுதும்போது கூட எனது வயதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தே வயதை குறிப்பிட்டேன். இதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1975ல் பிறந்திருந்தால் 1996ல் சதம் அடிக்கும்போது எனது வயது எப்படி 19ஆக இருந்திருக்க முடியும். 21 வயதாக அல்லவா இருக்க முடியும். சில தவறுகளால் அப்படி சுயசரிதையில் பதிவாகியுள்ளது.

கடந்த 7-8 மாதங்களாக நான் கொஞ்சம் பிஸி. துபாய், தென்னாப்பிரிக்காவுக்கு அடிக்கடி சென்றதால் புத்தகத்தை சரியாக படிக்கவில்லை. சுயசரிதையின் டிஜிட்டல் காப்பி விரைவில் வரும். அதில் என் உண்மையான வயது தெரியவரும்" எனக் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு தற்போது ட்ரோல் ஆகி வருகிறது.

More News >>