தமிழக தேர்தல் அதிகாரி சாகு தடுமாற்றம் ..! சிறப்பு அதிகாரி நியமியுங்கள்.!-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தடுமாறுவதாகவும், மாநில சிறப்பு தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திடீர் திடீரென உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் பல குழப்பமான முடிவுகளையும் எடுத்து வருவதும் எதிர்க் கட்சியினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி ஒருவர் அத்துமீறிய விவகாரத்தில், அதிகாரிகளைக் காப்பாற்ற பிரச்னையை பூசி மெழுகப் பார்த்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளானார்.
இந்நிலையில் தேனிக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்ட வாக்கு எந்திரங்கள் விவகாரத்திலும் சர்ச்சை வெடித்துள்ளது. இதிலும் விளக்கம் அளிக்கிறேன் என்ற ரீதியில், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் தவறுகள் நடந்தது கண்டறியப்பட்டு, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று ஒரு புது குண்டு போட்டுள்ளார். சாகுவின் இந்த திடீர் விளக்கம் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முழுமையான பாதுகாப்பளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார். மேலும் நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தடுமாறுகிறார். எனவேமாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் .
தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ள மு.க.ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.