அடுத்த பிரதமரை தீர்மானிப்பது யார்..? நாயுடுவா.! கே.சி.ஆரா..! - வியூகம் வகுப்பதில் போட்டா போட்டி
தேர்தலுக்குப் பிறகு நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே வியூகம் வகுத்து களத்தில் குதித்துள்ளதால் தேசிய அளவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
17-வது மக்களவைப் பொதுத் தேர்தல், 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 5 கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மத்தியில் பிரதமர் யார்? என்பதைத் தீர்மானிக்க, ஒரு பக்கம் மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சிகளை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார். அவரது பரம எதிரியான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ மற்றொரு பக்கம் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.
1996 தேர்தலில் நடந்தது போல பாஜக, காங்கிரஸ் அல்லாத தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காய் நகர்த்தி வருகிறார். சந்திரசேகர ராவ் மாநிலக்கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அரசு அமைக்கவே முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், பாஜக ஆதரவுடன் அவர் செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் அரசியல் எதிரியாக திகழும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தற்போது புதிய அரசு அமைக்கும் முயற்சியில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.டெல்லியில் 21-ந் தேதி பாஜக அணியில் இடம் பெறாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுப்பதே எங்கள் நோக்கம். 23-ந் தேதிக்கு பிறகு மோடிக்கு பதில் வேறு ஒருவர் தான் பிரதமர் பதவியில் இருப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த பிரதமர் யார் என்பதை ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம் எனக் கூறினார்.
இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கோ, பாஜகவுக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் , இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சியின் தயவில் தான் மத்தியில் கூட்டணி அரசு அமைய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காகவே காங்கிரஸ் பின்னணியில் நாயுடுவும், பாஜக பின்னணியில் ராவும் களத்தில் குதித்துள்ளனர் என்பதும் இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரிந்துவிடும்.