தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தலும் கடந்த 18-ந் தேதி முடிவடைந்து விட்டது. இந்நிலையில், தேனி மற்றும் ஈரோடு க்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஓட்டு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி தேனியில் போராட்டமும் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்தது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் சந்தேகம் மேலும் வலுத்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தேர்தலின் போது தேனி உட்பட 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வாக்குச்சாவடிகளில் எந்த நேரமும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.