விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யா கமிட்டானது எப்படி? சிவா - சூர்யா பட அப்டேட்
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் விஸ்வாசம் பட தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
சூர்யா கைவசம் தற்பொழுது மூன்று படங்கள் இருக்கிறது. ஒன்று, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே., படம் வருகிற மே 31ஆம் தேதி வெளியாகிறது. இரண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா நடிக்கும் காப்பான் படம் தயாராகிவருகிறது. போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கும் இப்படத்தை விரைவில் திரையில் பார்க்கலாம். மூன்று, இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம். அபர்ணா முரளி நாயகியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.
இந்நிலையில் சூர்யா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிறுத்தை சிவா. அஜித்துடன் வீரம், விஸ்வாசம், விவேகம் மற்றும் வேதாளம் என நான்கு படங்களை கொடுத்தார் சிவா. அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார்.
சூர்யா - சிவா கூட்டணி குறித்து விசாரிக்கும் போது, முதலில் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் சிவா. அந்த கதையை விஜய் ஓகே செய்த நிலையிலும் சில காரணத்தால் கைகூடவில்லை. அந்த கதையை தான் சூர்யாவுக்கு கூறியிருக்கிறார் சிவா. விஜய் சம்மதம் சொன்ன கதை என்பதால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று விஜய்க்கு சொன்ன கதையை உறுதி செய்திருக்கிறார் சிவா. அப்படியாக தான் சூர்யா - சிவா கூட்டணி பலமாகியிருக்கிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களே இந்தப் படத்திலும் இணையவிருக்கிறார்கள். ஆக, சிவாவின் ஆஸ்தான டி.இமான் முதன் முறையாக சூர்யாவுக்கு இசையமைக்கவிருக்கிறார். நகரம் சார்ந்த கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.