ஒரே பாதையில் 2 ரயில்கள்.! சிக்னல் கோளாறால் விபரீதம்...! மதுரை அருகே திக்.. திக்..!

மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை 5.40 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழையும் பெய்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் கூச்சலிட்டனர்.

இதனால் செங்கோட்டை ரயில் புறப்பட ரயில் நிலைய ஊழியர்கள் பச்சைக் கொடி காட்டின் . இந்த ரயில் புறப்பட்டு சுமார் 200 மீட்டர் தூரம் ரயில் சென்ற நிலையில், அதே பாதையில் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வரும் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்த தகவல் கிடைத்தது.

இதனால் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த ரயில்வே கேட் கீப்பர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க மதுரை-செங்கோட்டை ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு மீண்டும் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ரயில்வே ஊழியர்களின் அஜாக்கிரதையால் விபத்து நடக்க அறிந்து மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் திருமங்கலம் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அலுவலக கதவுகளையும் அடித்து சேதப்படுத்தினர். இதையடுத்து சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு மதுரை செங்கோட்டை ரயில் புறப்பட்டு சென்றது.

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதும் விபத்து தடுக்கப்பட்டாலும், சிக்னல் பிரச்னையால் மேலும் பல ரயில்கள் தாமதமானதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் ஒரே பாதையில் இரு ரயில்கள் இயக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் இன்று திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரயில் நிலையங்களின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அலட்சியமாக செயல்பட்டதாக திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சுதீப் சிங் மீனா ஆகிய இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

மத்திய, மாநில அரசு வேலை ... தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை ..! மு.க.ஸ்டாலின் உறுதி
More News >>