அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - திருமாவளவன்

அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு என்னுமிடத்தில் அய்யா வைகுண்டர் அவர்களின் நினைவிடம் உள்ளது. அது சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டுத்தலமாக உள்ளது. அதனைத் தலைமை இடமாகக் கொண்டு தென்மாவட்டங்கள் மற்றும் பரவலாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அய்யாவழிக் கோவில்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இன்று பல இலட்சக்கணக்கான மக்கள் அய்யாவழியைப் பின்பற்றி வருகின்றனர்.

இக்கோவில்களில் சிலை வழிபாடு இல்லை. கோவிலின் கருவறையில் ஆளுயரக் கண்ணாடி மட்டுமே உள்ளது. இக்கோவில்களில் ஆண்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கருவறைக்குள் சென்று வழிபட முடியும். குறிப்பிட்டச் சாதியினர் குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே கோவிலின் கருவறைக்குள் நுழையலாம் என்ற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.

அய்யாவழி என்பது இந்து மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, இது சைவம் அல்லது வைணவம் என்கிற எந்த வகைக்கும் உட்பட்டதல்ல. சைவ, வைணவ மடங்களைப் போல அய்யாவழிக் கோவில்கள் இந்து மதம் சார்ந்த மடமுமல்ல. எனவே, இக்கோவில்களை இந்து அறநிலையத்துறையில் இணைப்பது என்கிற முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்டத் தீர்ப்பில் அய்யாவழிக் கோவில்களை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், தமிழக அரசு அய்யாவழிக் கோவில்கள் தொடர்பாக ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>