மோடியை டிஷ்மிஸ் செய்ய முடிவெடுத்த வாஜ்பாய்..! காப்பாற்றிய அத்வானி..! அம்பலப்படுத்திய யஷ்வந்த் சின்கா
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்கா. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்கா, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். மோடி பிரதமரானவுடன் அக் கட்சியில் மூத்த தலைவர்களாக இருந்த எல்.கே.அத்வானி, மனோகர் ஜோஷி போன்றோரை ஓரம் கட்டியது போல் யஹ்வந்த் சின்காவையும் ஓரம் கட்டத் தொடங்கினார். இதனால் வெளிப்படையாகவே பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்போது தேர்தல் சமயத்திலும் மோடிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் சின்கா, ம.பி தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த சம்பவம் ஒன்றைக் கூறியுள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா கலவரம் நடைபெற்றது. அந்த கலவரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடியிடம் தெரிவித்தார். ஆனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மோடி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த பிரதமர் வாஜ்பாய், குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்குக் கூட வந்து விட்டார்.
ஆனால் மோடி தலைமையிலான குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்தால், அமைச்சரவையில் இருந்து விலகுவேன் என்று அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்ததன் காரணமாகவே மோடி அரசு தப்பித்தது. மோடியைக் காப்பாற்றியதற்கு முழுக் காரணமே அத்வானி தான். அப்போது தனது சிஷ்யராக, தீவிர விசுவாசியாக இருந்த மோடியை, பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி வழிவிட்ட அத்வானியையே இப்போது காணாமல் செய்து விட்டார் என்று யஷ்வந்த் சின்கா கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காம்பீருக்கு எதிராக அவதூறு வழக்கு - ஆம் ஆத்மி அறிவிப்பு