புயலை கிளப்பும் சூதாட்ட புகார் - அடுத்தடுத்து சிக்கும் இலங்கை முன்னாள் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன்படி ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வந்தது.
விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஜெயசூர்யா, அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறவில்லை என்றும், அவரது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வழங்க மறுத்துவிட்டார் எனவும் கூறப்பட்டது. இதற்காக ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி.
இந்நிலையில் இதேபோன்று ஒரு குற்றச்சாட்டு தற்போது மேலும் இரு இலங்கை வீரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவரும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஒரு புயலை கிளப்பியுள்ளது.
`ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும்' - பில்லா பாணியில் வெற்றியை கொண்டாடும் தாஹிர்