ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது...? மே 23-க்கு பின் முக்கிய அறிவிப்பாம்..!

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினி வரும் 23-ந் தேதிக்குப் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நான் எப்போது வருவேன்..? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்று ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கூறுவார். அந்த வசனம் இப்போது அவரது அரசியல் பிரவேசத்துக்கும் சரியாக பொருந்தும் என்றே கூறலாம்.

கடந்த1995-ம் வரும் முதலே இருந்தே ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார், அப்போது வருவார் என்று எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துவிட்டது அவரது செயல்பாடுகள் என்றே கூறலாம்.1995-ல் ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என்று கொளுத்திப் போட்டது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியையும் பறித்துவிட்டது. ரஜினிக்கு எதிராக அதிமுகவினர் கொந்தளிக்க, ரஜினியின் செல்வாக்கு உயரத்தில் பறந்தது.

அதுமட்டுமல்லாமல், 1996 சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறி, திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். இதனாலேயே அந்த கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது என்றும் கூறலாம்.

அப்போது முதலே ரஜினி அரசியலுக்குள் நுழைந்து விடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ரஜினி யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. இப்படியே 20 ஆண்டுகளுக்கும் மேல் உருண்டோடி விட்டது.

எப்போது நீங்கள் அரசியல் கட்சி தொடங்குவீர்கள் என்று ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போதெல்லாம் அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2017 டிசம்பர் 31-ந் தேதி சென்னையில் தனது ரசிகர்களை ஒன்று திரட்டிய ரஜினி, அரசியலுக்கு வருவதை பகிரங்கமாகவே அறிவித்தார். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம் என்றார். சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என்று கூறிவிட்ட கட்சியை ஆரம்பிப்பது எப்போது? என்ற கேள்வி எழுந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறி அமைதி காத்து விட்டார் ரஜினி. இந்நிலையில் தான் மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கவிழலாம் என்ற பரபரப்பு பரவிக் கிடக்கிறது. அப்படிக் கவிழ்ந்தால் அடுத்து சட்டப் பேரவை பொதுத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் வந்து விடும்.

இந்தச் சூழலில் தான் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா, தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி வெளியாகவுள்ள நிலையில், 23-ந் தேதிக்குப் பிறகு, முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறி, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளார்.

இன்று திருச்சி வந்த சத்தியநாராயணா மணிகண்டத்தில் ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகர்கள் கட்டியுள்ள மணிமண்டபத்தில் நடந்த மண்டல பூஜையில் பங்கேற்றார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந் தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகத்தான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார் சத்தியநாராயணராவ்.

இதனால் 23-ந் தேதி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே ரஜினியின் அடுத்த கட்ட பரபரப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தியநாராயணராவ் கூறியது போல் 23-ந் தேதிக்கு பிறகு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை உறுதியாக வெளியிடுவாரா? என்பது தெரிந்துவிடும்.

More News >>