அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது ஏன்? - சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் விளக்கம்
மயூரநாதர் சன்னதியில் பணியில் சேர்ந்த பிறகு என் கனவில் அபயாம்பிகை அம்மன் வந்து கூறியதாலே நான் சுடிதார் அலங்காரம் செய்தேன் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜு குருக்கள் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நூற்றுக்கணக்கான புராண வரலாறுகளை உள்ளடக்கிய இந்த ஆலயம், 7ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கோவில் அர்ச்சகர் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அம்மனை அவமானம் செய்யும் வகையில் செயல்பட்டு அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜு குருக்கள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "சென்னையில் தனியார் நிர்வாக ஆலயத்தில் பணிபுரிந்த போது அம்பாளுக்கு பலவித அலங்காரங்கள் செய்துள்ளேன். மயூரநாதர் சன்னதியில் பணியில் சேர்ந்த பிறகு என் கனவில் அபயாம்பிகை அம்மன் வந்து கூறியதாலே நான் சுடிதார் அலங்காரம் செய்தேன்.
இது தவறென்று என்னை பணி நீக்கம் செய்துவிட்டார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். விரைவில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை ஆதின நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளேன்" என்று கூறினார்.