வாக்குச் சாவடியில் விபரீதம்.. தவறுதலாக வெடித்த துப்பாக்கி... தேர்தல் அதிகாரி மீது பாய்ந்த குண்டு!
பீகாரில் வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தேர்தல் நடத்தும் அதிகாரி வயிற்றில் குண்டு பாய்ந்த விபரீதம் நடந்துள்ளது.
மக்களவைக்கு 6-வது கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் பீகாரில் 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் இன்று காலை முசாபர்பூர் தொகுதிக்குட்பட்ட சியோகாரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை துடைத்து சரி செய்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலான துப்பாக்கி வெடித்தது. இதில் சீறிப் பாய்ந்த குண்டு ஒன்று, வாக்குச்சாவடி அலுவலர் ஷிவேந்தர் கிஷோர் என்பவர் வயிற்றில் பாய்ந்து மயங்கி சரிந்தார். உடனடியாக அந்த அலுவலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.