சபாஷ் தீபக் சஹார்...- கோப்பையை கைப்பற்ற சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

ஐந்து ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி ரன் ரட்டை 10க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். 4 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்த டி காக் முதல் ஆளாக ஷர்துல் தாகூர் பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ரோஹித்தும் தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தார். ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா இந்த முறை கைகொடுக்க தவறினார். மறுமுனையில் மெதுவாக ஆடி வந்த இஷான் கிஷானும் 23 ரன்களில் வெளியேற 15வது ஓவரில் இருந்து ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்தனர் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு இணை.

பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

இருப்பினும் கடைசி ஓவரில் பொல்லார்டு அதிரடியாக ஆட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

More News >>