4வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னையின் கனவை தகர்த்த மலிங்கா
ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் அதிரடி காட்டிய டூ பிளஸ்சிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 1(4) ரன்னிலும், கேப்டன் தோனி 2 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் 44 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய பிராவோ 15 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் ஷேன் வாட்சன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் ஷர்துல் தாகூர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி.
இதனால் சென்னை அணியின் கனவு கைகூடாமல் போனது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா, மலிங்கா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த தோனியின் ரன் அவுட் தான். தோனி ஜெயித்து கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த வேளையில் அவர் ரன் அவுட் ஆனது ரசிகர்களை சோகமடைய செய்தது.