4 தொகுதிகள்...! 8 லட்சம் வாக்காளர்கள் ..! ஓட்டுக்கு ரூ.1000...! ரூ.80 கோடி பட்டுவாடா செய்த அமமுக
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு ரூ.1000 என ஒரே நாளில் பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளனர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியினர் .இதனால் 4 தொகுதிகளிலும் ஆயிரம் வந்துச்சா?வாங்கிட்டியா? என்பது தான் ஒரே பேச்சாகி பரபரத்துக் கிடக்கிறது இடைத் தேர்தல் களம்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையான போட்டியை தினகரனின் அமமுகவும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். 4 தொகுதிகளிலும் வலுவான பின்னணி கொண்ட வேட்பாளர்களை களம் இறக்கி விட்டு, தொகுதிக்கு 4 நாட்கள் என தீவிரப் பிரச்சாரத்திலும் குதித்துள்ளார் டிடிவி தினகரன். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் உள்ள அமமுக நிர்வாகிகளும் குவிக்கப்பட்டு தேர்தல் பணிகளிலும் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். அமமுகவினரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திமுக, அதிமுகவினரே திணறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த 4 தொகுதிகளிலும் ஓட்டுக்கு எவ்வளவு துட்டு கிடைக்கும் என்பது தான் வாக்காளர்களிடையே பிரதானமான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளும் அதிமுக தரப்பில் ரூ 5 ஆயிரம் வரை பட்டுவாடா செய்யப்படலாம் என்றும், திமுகவும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் அள்ளி வீசப் போகிறது என்றெல்லாம் பேச்சளவில் இருக்க, பட்டுவாடாவிலும் அமமுகவினர் முந்திக் கொண்டு, கனகச்சிதமாக முடித்துவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதிக்கு தலா 2 லட்சம் வாக்காளர்களை முன்கூட்டியே கணக்கெடுத்து வைத்திருந்த அமமுகவினர், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இந்த பட்டுவாடாவை முடித்து விட்டனராம். 25 வாக்காள்களுக்கு ஒரு நிர்வாகி என நியமித்து ஓட்டுக்கு ரூ 1000 ஆயிரம் வீதம் 8 லட்சம் வாக்காளர்களுக்கு மொத்தம் 80 கோடி ரூபாயை கொண்டு சேர்க்கும் பணியை இடையூறு ஏதுமில்லாமல் சேர்த்து விட்டோம், வெற்றியும் எங்களுக்கே என்று குதூகலிக்கிறதாம் அமமுக வட்டாரம். இந்தப் பட்டுவாடாவை பார்த்து விட்டு அதிமுகவும், திமுகவும் அடுத்து களத்தில் பணத்தை வாரியிறைக்க தயாராகி வருகின்றனர். இதனால் 4 தொகுதிகளிலும் பணம் வந்துச்சா?வாங்கியாச்சா? அதிமுக எவ்வளவு கொடுக்கப் போகுதாம்? திமுக தரப்பு கொடுக்குமா? என்பதாகத்தான் பேச்சாகிக் கிடக்கிறது.
முதுபெரும் தலைவர் நல்லகண்ணுக்கு நெருக்கடி கொடுப்பதா? - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்