மே 23-க்கு பிறகு என்ன நடக்குமோ தெரியல..? டிடிவிக்கு எதிராக கப்சிப்..! அடக்கி வாசிக்கும் அமைச்சர்கள்..!
மே 23..! இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பாலானோர் உச்சரிக்கும் தேதியாகிவிட்டது. நடப்பது என்னவோ மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் மக்களவைப் பொதுத் தேர்தல் தான் என்றாலும், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுள் நீடிக்குமா? நீடிக்காதா? என்பது தெரிந்து விடப்போகிறது.
இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, 23-ந் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார். இதற்கு ஒருபடி மேலாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனோ, மே 23-க்குப் பிறகு எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்போம். அடுத்து ஒரு சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கு தயாராவோம் என்று தெம்பாக அடித்துக் கூறி வருகிறார்.
டிடிவியின் இந்தத் தெம்பான பேச்சால் 4 தொகுதி இடைத் தேர்தல் களத்தில் அமமுகவினர் கெத்தாக வலம் வர, அதிமுகவிலோ மேல் மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டன் வரை 23-ந் தேதிக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற பதட்டத்திலும், ஏகப்பட்ட குழப்பத்திலும் இருப்பதாகவே தகவல் வெளியாகி வருகிறது. இதனால் தற்போதுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மீது கட்சியின் விசுவாசிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்து, டிடிவி தினகரன் தான் இனி அதிமுகவை வழிநடத்த சரியான தலைமை என்ற முடிவுக்கு இப்போதே வந்து விட்டனராம்.
அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் சாய்ந்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என்றாலும், இப்போதே ஓரளவுக்கு இப்படித்தான் நடந்துள்ளது என்ற கணிப்பு அதிமுக தரப்புக்கும், அமமுக தரப்புக்கும் தெரிந்துவிட்டதாம். இதில் உற்சாகமடைந்துள்ளது டிடிவி தரப்பு தான் என்று தற்போது நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தைக் காணும் போதே தெரிகிறது. அந்தளவுக்கு அமமுக பக்கம் அதிமுக தொண்டர் படையும் கைகோர்த்து டிடிவி க்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனராம்.
அதிமுக தொண்டர்கள் அப்பட்டமாக களத்தில் டிடிவி பக்கம் சாய்ந்துள்ளதைப் பார்த்து அமைச்சர்கள் பலரும் இப்போதே வேர்க்க விறுவிறுக்க ஒருவித பதட்டத்திற்கு சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் 23-ந் தேதிக்குப் பிறகு அதிமுகவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்கேன் வம்பு என்ற ரீதியில் அமைச்சர்கள் பலரும் கப்சிப்பாகி தினகரனுக்கு எதிராக குரல் கொடுப்பதை அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டனர்.
குறிப்பாக வாய்ச்சவடால் அடிக்கும் தென் மாவட்ட அதிமுக அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயக்குமார், ராஜலெட்சுமி ஆகியோர் தினகரன் பற்றிய சிங்கிள் விமர்சனம் கூட உச்சரிப்பதை நிறுத்தி விட்டனராம். இதே போன்றுதான் பிற அமைச்சர்களும் மட்டுமின்றி முதல்வர் எடப்பாடியே கூட டிடிவி தினகரன் மீதான தாக்குதலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்.
இதில் விதிவிலக்காக, துணை முதல்வர் ஓபி எஸ் மட்டுமே டிடிவி தரப்பை சாடி வருகிறார். அதுவும் கூட தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு அணி மாறப்போகிறார் ஓபிஎஸ் என்று அமமுக தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டும் ஒரு காரணம் என்பதால் மட்டுமின்றி, அதிமுகவில் தினகரன் கை ஓங்கும் பட்சத்தில் முதல் பலிகடா தானாகத் தான் இருக்கும் என்று ஓபி எஸ் நினைப்பதும் மற்றொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.இதற்கெல்லாம் விடை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ந் தேதி அனைவருக்கும் தெரியத்தான் போகிறது.
21-ந்தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம்...! மம்தா, மாயாவதி புறக்கணிப்பு ஏன்.? காரணம் இதுதான்..!