விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு
இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் 1980 தலையெடுத்தபோது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பகிரங்கமாக ஆதரவளிக்கப்பட்டது. நிதியுதவி ஆயுதஉதவி மட்டுமின்றி பயிற்சி முகாம்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகள் சர்வ சாதாரணமாக வந்து சென்றனர்.
ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. அது முதல் இன்று வரை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2024-ம் ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடையை நீட்டித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் காரணமாக, சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் வடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
13 இடங்களில் மறுவாக்குப்பதிவு எங்கெங்கே?- ஆணையம் அறிவிப்பு : அடுத்த பட்டியலும் வெளியாக வாய்ப்பு