சென்னையில் பரவலாக மழை... வானவில்லைக் கண்டு ரசித்த மக்கள்
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையில் இன்று அதிகாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சம் நீலகிரி மாவட்டத்தில் கே பிரிட்ஜ் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ., கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவானது.
இந்நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, இன்று அதிகாலையில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேசமயம், மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் வானவில் தோன்றியது. இதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.