விஜய் மல்லையாவின் கடன் பற்றி எதுவும் தெரியாதா? - கை விரித்த மத்திய அரசு
தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கியுள்ள கடன் குறித்த, எந்த விவரமும் தங்களிடம் இல்லை என்று தகவல் ஆணையத்திடம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதை கண்டு தகவல் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ மதுபான ஆலை முதலாளியான விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு? என்று ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கான பதிலை பெறுவதற்காக, மத்திய தகவல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையொட்டியே, மல்லையாவின் கடன் தொடர்பான கணக்கு வழக்குகள் தங்களிடம் இல்லை என்று கூறி மத்திய நிதியமைச்சகம் ஆச்சரியமூட்டியுள்ளது.
“தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை; அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள், யாரெல்லாம் அவரின் கடனுக்கு உத்தரவாதம் அளித்தார்கள் உள்பட எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை” என நிதி அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில், தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரை வந்தடைந்த நிலையில், நிதியமைச்சகத்தின் பதில் குறித்து அதிர்ச்சி வெளியிட்ட அவர், நிதி அமைச்சகத்தின் பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் இல்லை என்று ஆவேசப்பட்டுள்ளார்.
இதனிடையே, மல்லையாவின் கடன் குறித்த எந்த ஆணவங்களும் தங்களிடம் இல்லை என்று தற்போது கூறியிருக்கும் மத்திய நிதி அமைச்சகம்தான், 2017-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்திருந்தது.
“மல்லையாவின் பெயரைக் குறிப்பிட்டு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ரூ. 8 ஆயிரத்து 400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; இவை அனைத்தும் வராக்கடனாக இருக்கின்றன; இதில் ரூ. 155 கோடியை வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட்டு வசூலித்து இருக்கின்றன” என்று அதில் தெரிவித்திருந்தது.
அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்குவார் இத்தகவலை சமர்ப்பித்திருந்தார். ஆனால், ஏனோ தங்களிடம் எந்த விவரமும் இல்லை என்று கூறி மத்திய நிதியமைச்சகம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.