விழிப்புணர்வு பிளஸ் விஸ்வாசம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் புதிய புரொமோ ஒன்றில், ஹெல்மெட் போடும் அவசியத்தை வலியுறுத்தும் சிவகார்த்திகேயன் அதற்காக கூறும் டயலாக்கில் அஜித் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை கொடுத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதிஷ் நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்துக்கான புரொமோஷன் பணிகளில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு புரொமோ வீடியோவில், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட்டுடன் செல்கின்றனர்.
பின்னாடி அமர்ந்து இருக்கும் எனக்கு எதுக்குடா ஹெல்மெட் என ராதிகா கேட்க, மத்தவங்கள விட நமக்கு நம்ம தல தான்மா முக்கியம் என சிவகார்த்திகேயன் சொல்கிறார்.
தல என சிவகார்த்திகேயன் சொன்னது தலையை மட்டும் அல்ல தல அஜித்தையும் சேர்த்து சொல்லியுள்ளார் என அஜித் ரசிகர்கள் அந்த புரொமோவுக்கு புரொமோஷன் செய்ய துவங்கி விட்டனர்.