கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை உடைப்பு ..! பாஜகவுக்கு எதிர்ப்பு ..! திரிணமுல்,மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மே.வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருக்கத்தில் வன்முறை, மோதல் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசின் பல்வேறு தடைகளை தகர்த்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நடத்திய பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்து கொல்கத்தா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மே.வங்கத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட வங்கத்தின் தந்தை என போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்திய பாஜகவினருக்கு எதிராக திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கொல்கத்தாவில் பதற்றம் நீடிக்கிறது.

மே.வங்க மாநிலத்தில் பாஜகவை எப்படியாவது காலூன்றச் செய்து விட வேண்டும் என அக்கட்சி இந்தத் தேர்தலில் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. இதற்கு திரிணாமுல் கட்சித் தலைவரும் மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தடைகளை போடுவதால் கடந்த 2 மாதங்களாகவே மே.வங்கத்தில் பதற்றமான சூழல்தான் நிலவி வருகிறது.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் அடிக்கடி மே.வங்க பயணத் திட்டத்தை வகுத்து முதல்வர் மம்தாவைக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் தேர்தல் நெருங்க, நெருங்க பதற்றமும் அதிகரித்து விட்டது.இந்நிலையில் நேற்று மம்தா ஏற்படுத்திய பல்வேறு தடைகளைத் தாண்டி கொல்கத்தாவில் அமித் ஷா தலைமையில் பிரமாண்ட பேரணியை பாஜக நடத்தியது. இந்தப் பேரணியில் திடீரென வன்முறை வெடிக்க, பாஜகவினரும், திரிணமுல் கட்சியினரும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களால் போர்க்களமான சூழலில், கொல்கத்தா பல்கலைக்கழகம் முன் இருந்த, வங்கத்து தந்தை என மே.வங்கத்து மக்களால்,ஏறத்தாழ 2 நூற்றாண்டுகளாக போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகர் சிலையை பாஜகவினர் அடித்து சேதப்படுத்தினர். சிலை சேதப்படுத்தப் Uட்ட சம்பவத்தினால் கொல்கத்தாவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பாஜக நடத்திய வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தா, வெளி ஆட்களைக் கொண்டு வந்து மே.வங்கத்தில் வன்முறையை பாஜக கட்டவிழ்த்து விடுகிறது.மே.வங்க சரித்திரத்தில் இது போன்று முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை என்றும், வித்யாசாகர் சிலை சேதப்படுத்திய பாஜகவுக்கு உரிய தண்டனையை மக்கள் வழங்குவார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இதே போன்று பாஜகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினரும் கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை அருகே போராட்டத்தில் குதித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியினர் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தியதால் கொல்கத்தா நகரத்தில் பதற்றம் நீடிக்கிறது.

More News >>