மே 23-ல் டெல்லியில் காங். கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலினுக்கு சோனியா அழைப்பு!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 23-ந் தேதி மாலையில், டெல்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் திருவிழா முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது. ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசிக் கட்டமாக வரும் 19-ந் தேதி 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான அடுத்த கட்ட வியூகங்கள் வகுப்பதில் முக்கிய கட்சிகள் மும்முரம் காட்டத் தொடங்கி விட்டன. மீண்டும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று பாஜக உரக்கக் கோஷமிட்டாலும், கள நிலவரத்தைப் பார்த்து, அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தகவல் கள் வெளியாகி வருகின்றன. காங்கிரசுக்கும் மெஜாரிட்டி கிடைப்பது சந்தேகம் தான் என்றாலும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் தயவில் ஆட்சியமைத்து விடலாம் என்று காய் நகர்த்தி வருகிறது.
காங்கிரசுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார். இதற்காக வரும் 21-ந் தேதி டெல்லியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இதில் பங்கேற்க மே.வங்க முதல்வர் மம்தா, உ.பி.யில் கூட்டணி சேர்ந்துள்ள மாயாவதி, அகிலேஷ் போன்றோர் தயக்கம் காட்டுகின்றனர். முடிவுகள் வரட்டும், அதன் பின் மத்தியில் ஆட்சியமைப்பது குறித்து பேசலாம் என்று மம்தா, மாயாவதி போன்றோர் கருதுகின்றனர்.
மற்றொரு புறம் மாநிலக் கட்சிகளை அணி சேர்க்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டினாலும், அவருடைய முயற்சிகள் தற்போதைக்கு எடுபடவில்லை என்றே தெரிகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 3 நாட்களுக்கு முன் சந்தித்த கே.சி.ஆர்., திமுகவை 3-வது அணிக்கு இழுக்க நடத்திய முயற்சியும் கை கூட வில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களை டெல்லியில் ஒன்று சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக மே 23-ந் தேதி மாலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்.! பிடி கொடுக்குமா திமுக?