சர்ச்சைப் பேச்சால் வழக்கு... கமல் முன்ஜாமீன் மனு மீது காரசார வாதம்...! தீர்ப்பு ஒத்திவைப்பு..!

கோட்சேவை இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது அர வக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கமலின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவக்குறிச்சியில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் இந்தப் பேச்சுக்கு பாஜக, அதிமுக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கமல் மீது வழக்குகளும் தொடுத்து வருகின்றனர்.அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கமல் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்தனர்.

இதனால் நேற்று இரவே கமல் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் தம்மை, வழக்குப்பதிவு செய்துள்ளதை காரணம் காட்டி போலீசார் கைது செய்யக் கூடாது என்றும், முன் ஜாமீன் கேட்டும் கமல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடத்திய நீதிபதிகள், கமல் பேசியது குறித்து சரமாரி கேள்வி எழுப்பினர். கோட்சே இந்து என்பதைத் தவிர வேறு அடையாளமே இல்லையா? என்றதற்கு, கோட்சேவைப் பற்றி மட்டுமே பேசிய நிலையில், இந்துக்கள் பற்றி வேறு எந்த கருத்தும் கூறவில்லை என்று கமல் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் தாம் கூறிய கருத்தை தமக்கு பொது வாழ்வில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுவதாகவும் கமல் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் கமலுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கமலின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் அவரை கைது செய்ய நேரிடும் என்றார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.மேலும் கமல் பேசியது குறித்து ஊடகங்களும், அரசியல் கட்சியினரும் விவாதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

More News >>