நம் நேர்மை, பொறுமைக்கு ஒரு அக்னிப் பரிட்சை! தொண்டர்களுக்கு கமல் எச்சரிக்கை!!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது செருப்பு வீசப்பட்டதை அடுத்து, அவர் தனது தொண்டர்களிடம், ‘வம்பிழுக்கும் வன்முறைக்கு மயங்கி விடாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இரவு 9.45 மணிக்கு வேலாயுதம்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடியே அவர் பேசினார்.
அவர், பேச்சை முடித்த பின்பு கீழே இறங்க முயன்ற போது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. முட்டையும் வீசப்பட்டது. அவை கமல் மீது படவில்லை. மேடையில் விழுந்தன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கமல் உடனடியாக காரில் ஏறி சென்று விட்டார்.
இதற்கிடையே, செருப்பு வீசியவரை மக்கள் நீதிமய்யம் கட்சியினர் பிடித்து அடித்தனர். பின்னர், அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில் 3 பேர் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பி விட்டதும் தெரியவந்தது.பிடிபட்டவர், கரூர் ஒன்றிய பா.ஜ.க. இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள் நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும், மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் கமல் இன்று பிரசாரம் செய்யவி்ருந்தார். அதற்கு காவல் துறை சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, அனுமதி மறுத்துள்ளது.
4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா 'ஜரூர்'