கவுன்சிலராக கூட கமல் ஆக முடியாது! அமைச்சர் மீண்டும் எரிச்சல்!!

கவுன்சிலர் தேர்தலில் கூட கமல் ஜெயிக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சாடியுள்ளார்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தின் போது, ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தீவிரவாதி. அது காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே’’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் பேச்சைக் கேட்டு, பா.ஜ.க.வினரையும் விட அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று குறிப்பிடவே, அது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமல் தான் பேசியது சரித்திர உண்மை என்று மீண்டும் பேசியிருக்கிறார். இதற்கு பதிலளித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் நேற்று தூத்துக்குடியில் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கமல், சரித்திர உண்மையை சொல்கிறேன் என்று கூறி, தரித்திரத்தை விலைக்கு வாங்கி வருகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்வது சரித்திர உண்மையா?

அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் பல உள்ளன. அதற்குள் யாரும் போக வேண்டாம். அதனை பற்றி பேசிக் கொண்டு இருந்தால் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும்.

முஸ்லிம் ஓட்டுக்களை வாங்குவதற்காக கமல் இப்படி பேசுகிறார். இதே கமல், அவரது விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை எப்படி சித்தரித்தார் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்போது முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த படத்தில் பல்வேறு காட்சிகளை அகற்றி திரையிட வைத்தார். ஆனால், இப்போது அந்த முஸ்லிம்களின் ஓட்டுக்காக, இந்துக்களை தீவிரவாதியாக குறிப்பிட்டு கமல் பேசுகிறார். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இப்போதும், உண்மை கசக்கத்தான் செய்யும் என்று கமல் பேசுவது, அவர் மீண்டும் விஷத்தை கக்குகிறார் என்றுதான் பொருள். அவர் அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவரால் கவுன்சிலர் தேர்தலில்கூட ஜெயிக்க முடியாது. இதுபோன்று எடக்கு மடக்காக பேசுகிறவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

வழக்கு மேல் வழக்கு போட்டாலும் ..? கமலின் நிலைப்பாட்டில் உறுதி..! மக்கள் நீதி மய்யம் திட்டவட்டம்
More News >>