நடிகர் சங்க நில விற்பனை முறைகேடு! சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்!!
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 சென்ட் நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம் வாங்கியிருந்தது. இந்த நிலத்தை சங்கத்தின் பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் விற்றுள்ளனர்.
இது தொடர்பாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, சங்கத்தின் இப்போதைய நி்ர்வாகிகள் நோட்டீஸ் அனுப்பினர். இவர்களில் காளை இறந்து விட்டார். மற்ற நான்கு பேருக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது
இதன்பின், ராதாரவி, செல்வராஜ் அளித்த பதிலை சங்க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சரத்குமார் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், நில விற்பனையால் சங்கத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறி, சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம், நடிகர் சங்கத் தலைவர் விஷால் புகார் அளித்தார்.
இதன்பின், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, புகாரின் மீது 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.