தி.மு.க.வை உடைக்கும் 70 வயது தலைவர்? அமைச்சர் பகீர் தகவல்!

தேர்தல் முடிவுக்குப் பிறகு தி.மு.க. இரண்டாக உடையும். 70 வயதை நெருங்கும் தலைவர் அந்த கட்சியை உடைப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இது, தி.மு.க.வில் யார் அந்த தலைவர் என்ற பரபரப்பை கிளறி விட்டிருக்கிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 17ம் தேதி மாலை ஓய்ந்தது. அப்போது ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனுக்கு தன்னை புகழ்பவர்களை மட்டுமே பிடிக்கும். அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரை கடுமையாக திட்டியிருக்கிறார். கட்சியில் இருந்தே அவரை விலக்கி விட்டார். ஆனால், இப்போது அவர் தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை முடக்கப் பார்க்கிறார். அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை கூட தினகரனுக்கு கிடையாது.

வரும் 23ம் தேதிக்கு பிறகு அரசியல் மாற்றம் வரும் என்று தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். ஆனால், மக்களோ எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள், இரட்டை இலைக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும்.

தி.மு.க. எப்போதுமே நேர்மையான முறையில் ஆட்சியை பிடித்ததில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சனைகள் வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தனர். வரும் 23ம் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப் போகிறது.

தி.மு.க.வில் கருணாநிதி காலத்தில் இருந்த, 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் செல்பவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து விடுவார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வெளியே வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் இப்போதைய நிலை.

எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமாவுக்கு சரியாக இருக்கும். ஆனால், நிஜத்தில் நடக்காது. எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்.இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தி.மு.க.வில் 70 வயதை நெருங்கும் தலைவர், கட்சியை உடைப்பார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது யாரை என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மு.க.அழகிரிக்கு இப்போது வயது 68. ஆனால், அவர் கட்சியில் இருந்து கருணாநிதியாலேயே நீக்கப்பட்டு விட்டார். கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சியை உடைக்க முடியும்? அவரைத்தான் அமைச்சர் சொல்கிறார் என்றால் நேரடியாக அதை சொல்வதில் என்ன தயக்கம் ஏற்படப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, வேறொருவரை அமைச்சர் சொல்கிறாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. துரைமுருகனுக்கு 80 வயதாகி விட்டது. டி.ஆர்.பாலுவும் 75 வயதை தாண்டி விட்டார். பொன்முடிக்கும், எ.வ.வேலுவுக்கும்தான் 68 வயதாகிறது. இவர்கள்தான் 70 வயதை நெருங்கும் தலைவர்கள் என்று சொல்லலாம்.

ஒரு வேளை, மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி வந்து விட்டால், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்துவதற்காக தி.மு.க.வை உடைக்கும் ரகசியத் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனாலும், ராஜேந்திர பாலாஜி யாரைச் சொன்னார், எதற்காக அப்படி சொன்னார் என்பதெல்லாம் அவருக்குத்தான் வெளிச்சம்.

வழக்கு மேல் வழக்கு போட்டாலும் ..? கமலின் நிலைப்பாட்டில் உறுதி..! மக்கள் நீதி மய்யம் திட்டவட்டம்
More News >>