வீட்டுக்கு வீடு மாட்டுக் கோமியம் சப்ளை செய்யும் மாநில அரசு - 20 மில்லி குடித்தால் நோய்கள் தீருமாம்!
உத்தரப்பிரதேசத்தில் பசுமாட்டுச் சிறுநீரை ‘சுகாதார பானம்’என்ற பெயரில், வீடு, வீடாக வழங்க அங்குள்ள பாஜக அரசு முடிவு செய்து உள்ளது.
பசுவின் சிறுநீர் சர்வரோக நிவாரணி என்று சங்-பரிவாரங்களும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பசுவின் சிறுநீர், மனிதர்களின் கிட்னி கோளாறைக் கூட சரி செய்கிறது. இதை குடித்தால் புற்றுநோய்கூட போய்விடும் என்று பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலேயே பேசி அதிர்ச்சி அளித்தனர்.
இதனிடையே, பசுவின் சிறுநீரை சுகாதார பானம் என்ற பெயரில், உத்தரப்பிரதேசத்தில் வீடு, வீடாக வழங்க அங்குள்ள பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசுக்கு சொந்தமான ஆயுர்வேத பார்மசி இரண்டு இடத்தில் உள்ளது. அதில் பிலிபித் என்ற இடத்தில் உள்ள ஆயுர்வேத பார்மசி தான் பசுமாட்டுச் சிறுநீரை சுகாதார பானமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாட்டில்களில் இதை அடைத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஆயுர்வேத கல்லூரி மற்றும்மருத்துவமனை சூப்பிரண்டும், முதல்வருமான டாக்டர் பிரகாஷ் சந்திரா சக்சேனா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “பசு மாட்டு சிறுநீரை சுகாதார பானமாக மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 முதல் 20 மில்லி மீட்டர் வரை பசுமாட்டு சிறுநீரை குடித்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம்; இதற்காக பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் பணி நடைபெறுகிறது” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுநீரில் சுகாதார பானம் தயாரிக்கும் இந்த அரசு பார்மசி தான் உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை சப்ளை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.