தேர்தல் ஆணையர்களிடையே வெடித்த மோதல்...! பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டது அம்பலம்..!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்ததாக எமுந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மூலம் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.

17-வது மக்களவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே தேர்தல் ஆணையத்தைச் சுற்றி சந்தேக வளையங்கள் எழ ஆரம்பித்து விட்டன. பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாக ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்க ஆரம்பித்தன.

தேர்தல் தேதி அறிவிப்பதிலேயே காலம் தாழ்த்தி பல்வேறு குளறுபடிகளை செய்தது தேர்தல் ஆணையம் . ஏனெனில் அப்போதுதான் நாடு முழுவதும் பறந்து, பறந்து சென்று பல்வேறு திட்டங்களை அறிவிப்பதும், தொடங்கி வைப்பதும் என விறுவிறுப்பு காட்டி வந்தார் பிரதமர் மோடி.

இதனால் பிரதமரின் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் முடிவடையும் வரை பொறுத்திருந்து, அதன் பின்னரே தேர்தல் தேதி அறிவிப்பும், நடத்தை விதிகள் அமலும் நடைமுறைக்கு வந்தன. தேர்தல் தேதி மார்ச் 10-ல் அறிவிக்கப்பட்டு இந்த இடைப்பட்ட 70 நாட்களில் தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல எனலாம். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக்குவதும், ஆளும் பாஜகவோ, பிரதமர் மோடியோ எல்லை மீறினால் கண்டு கொள்ளாமல் விடுவது என பாரபட்சமாகவே செயல்பட்டு வந்தது தேர்தல் ஆணையம் .

கடைசியில் உச்ச நீதிமன்றம் சாட்டையைச் சுழற்ற, பாஜகவின் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத், மேனகா காந்தி, பிரக்யா சிங் போன்ற சிலர் மீது கண் துடைப்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனாலும் பிரதமர் மோடி, அமித் ஷா போன்றோருக்கு நற்சான்றிதழ் வழங்குவதையே வாடிக்கையாக்கி வந்தது தேர்தல் ஆணையம் .கடைசியாக மே.வங்க விவகாரத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு வழிவிட்டு, திடீரென முன்கூட்டியே ஒரு நாள் பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஏக விமர்சனத்துக்கு ஆளானது. பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று கூட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், பாஜகவுக்கு சாதகமாகவும் நடந்து கொண்டதெல்லாம் உண்மை தான் என்பது தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எழுதியுள்ள ஒரு கடிதம் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும், மற்ற இரு ஆணையர்களாக அசோக்ல வாசா, சுஷில் சந்திரா என இருவரும் உள்ளனர். சுனில் அரோரா உட்பட இந்த மூவருக்குமே ஒரே அந்தஸ்துதான்.முக்கிய முடிவுகள் எடுக்கும் போது இவர்கள் மூவரின் பங்கு தான் முக்கியமானது. இதில் ப்ரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான புகார் மீது கடந்த 3-ம் தேதி தேர்தல் ஆணையர்கள் மூவரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் மோடி, அமித் ஷா ஆகியோர் மீது எடுக்க வேண்டும் என்ற லவாசாவின் கருத்தை மற்ற இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லையாம். லவாசாவின் கருத்தை புறந்தள்ளி விட்டு மோடி, அமித் ஷா இருவருக்கும் நற்சான்றிதழ் கொடுத்து விட்டனராம் சுனில் அரோராவும், சுஷில் சந்திராவும். அதன் பின் பல புகார்கள் வந்தும் தேர்தல் ஆணையர்களின் கூட்டமே நடத்தப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தி அடைந்த அசோக் ல வாசா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதிய விவகாரம் தற்போது வெளியில் கசிந்துள்ளது. அதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக குறித்த புகார் களில் தன்னுடைய கருத்து ஏற்கப்படாதது மட்டுமின்றி, பதிவும் செய்யப்படவில்லை என்றும், இதே போக்கு நீடித்தால் அடுத்து நடக்கும் தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அசோக் லவாசா குறிப்பிட்டுள்ளாராம்.இந்த கடித விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கே கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு..! பாஜக கொந்தளிப்பு...! தேர்தல் ஆணையத்திலும் புகார்
More News >>