நான் அரசியலுக்கு வந்ததில் என் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி பிரியங்கா காந்தி பேட்டி!

‘‘என்னை அரசியலுக்கு வருமாறு 2 ஆண்டுகளாக என் குழந்தைகள் வற்புறுத்தி வந்தார்கள். இப்போது நான் வந்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!‘’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நானும், ராகுலும் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு இடையேதான் வளர்ந்தோம். அரசியல் வன்முறைகள், பல்வேறு இழப்புகளுக்கு இடையே நாங்கள் வளர்ந்தோம். என் குழந்தைகளுக்கு அந்த நிலைமை வரக் கூடாது என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வராமல் இருந்தேன். டெல்லியில் குழந்தைகளை வளர்ப்பதில் பல சவால்கள் இருக்கின்றன.

ஆனால், இப்போது என் குழந்தைகளே நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். 2 ஆண்டுகளாக என்னை அரசியலில் பங்கேற்குமாறு அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அரசியல் திறமைகள் இருந்தும் அதை நான் வீணடிப்பதாக அவர்கள் கருதினார்கள். சமையல்காரர், எலக்ட்ரீசியன் போன்றவர்களை வேலை வாங்குவதில் கவனம் செலுத்தி, உங்கள் திறமைகளை வீணடிக்கிறீர்கள் என்று என் மகன் கிண்டலடித்து வந்தான். இப்போது நான் அரசியலில் பங்கேற்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோட்சேவை தேசபக்தர் என்று சொன்ன பிரக்யா சிங்கை மன்னிக்கவே மாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்லியிருப்பது தட்டிக் கழிக்கும் செயல். அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தேசப்பிதாவாக நாம் மதிக்கும் மகாத்மாவை கொன்ற கோட்சேவைப் பற்றி பிரதமர் என்ன கருதுகிறார் என்று தெரியவில்லை. அவரது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மோடிஜி...உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..! கிண்டலடித்த ராகுல் காந்தி
More News >>