அமேதியில் போட்டியிடுவேன்! பிரியங்கா காந்தி தகவல்!!
ராகுல்காந்தி 2 தொகுதிகளிலும் வென்று அமேதியில் விலகினால், அங்கு நான் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பதற்காக மாயாவதியுடன் எங்க அம்மா(சோனியா) பேச்சுவார்த்தை நடத்தினார். ராகுலும் அகிலேஷிடமும், மாயாவதியுடனும் பேசினார். அகிலேஷிடம் ஜோதிராதித்ய சிந்தியாவும் தொடர்பில் இருந்தார். ஆனாலும் ஏதோ காரணங்களால் அவர்கள் கூட்டணிக்கு வரவில்லை. ஆனாலும், உ.பி.யில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருந்தோம். அதற்காக, பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராமல் கவனமாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம்.
பிரதமர் மோடி எனது தந்தையைப்(ராஜீவ்காந்தி) பற்றி எல்லாம் பிரச்சாரத்தில் பேசினார். நாட்டில் இப்போதுள்ள பிரச்னைகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுகிறார். அதனால், எனது தந்தையைப் பற்றி அவர் பேசிய போது எனக்கு கோபம் வரவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது.
நான் அமேதியில் போட்டியிடுவேனா என்று பலரும் கேட்கிறார்கள். ராகுல் 2 தொகுதிகளிலும் வென்று, அமேதியில் விலகினால் அங்கு நான் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது. அந்த சமயத்தில் அது பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
நடிகர் சங்க நில விற்பனை முறைகேடு! சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்!!