மக்களவை இறுதிக் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு - 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஓட்டுப்பதிவு
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவைக்கு நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 12-ம் தேதி வரை வேலூர் தொகுதி தவிர்த்து 483 தொகுதிகளில் 6 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று பஞ்சாப், உபி, ம.பி, மே.வங்கம், இமாச்சல் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத், தனது சொந்த ஊரான கோரக்பூரில் இன்று காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறை வெடித்த மே.வங்க மாநிலத்தில், மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தொகுதிகள் உள்ளிட்ட 9 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அங்கு வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது.சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மாதிரி ஓட்டுப் பதிவின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் உள்பட 25 சின்னங்களின் பட்டன் வேலை செய்யாததால் வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
7 கட்டமாக அறிவிக்கப்பட்ட மக்களவைக்கான தேர்தல் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஓட்டு எண்ணிக்கை வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்பதால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே போன்று தமிழகத்திலும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கவிழும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பும் உள்ளது. இதற்கெல்லாம் மே 23-ந் தேதி விடை தெரியத்தான் போகிறது.