மேற்கு வங்கத்தில் வன்முறை! வாக்குச்சாவடியில் குண்டு வீச்சு!!

மேற்கு வங்கத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் இறுதி கட்டமாக 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 9 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலையில் வடக்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள பாராசத் தொகுதியில் கிலபேரியா வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த சமூக விரோதிகள் கையெறி குண்டுகளை வாக்குச்சாவடி மீது வீசி விட்டு தப்பியோடினர். வெடிகுண்டுகள் வீசப்பட்டதும் வாக்களிக்க காத்திருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதே போல், தெற்கு பர்சானா மாவட்டத்தில் வரும் ஜெயநகர் தொகுதிக்கு உட்பட்ட குல்கோலி வாக்குச்சாவடியிலும் சிலர் வெடிகுண்டுகளை வீசினர். இதனால், அங்கும் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.பாராசத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சயந்தன் பாசு கூறுகையில், ‘‘எனது தொகுதியில் சந்தேஷ்களி, ஹிங்கல்கஞ்ச், பதூரியா ஆகிய இடங்களில் போலீஸார் துணையுடன் திரிணாமுல் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார். வாக்குப்பதிவு தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குள் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 150 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News >>