இன்னொரு செருப்பும் வரும் என காத்திருக்கிறேன் - காந்தியின் வரலாற்று நிகழ்வை ஒப்பிட்டு பேசிய கமல்!

ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்பும் வரும் என்று காத்திருக்கிறேன் என்று காந்தி காலத்தில் நடந்த ஒரு செருப்பு சம்பவத்துடன் ஒப்பிட்டு கமல் ஹாசன் பேசியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்ற ஒரு இந்து என்று கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு கமலும் சுடச்சுட பதிலளித்து வருகிறார். இந்து தீவிரவாதி என்பது சரித்திர உண்மை என்ற கமல், இந்து என்ற உச்சரிப்பே மாற்றான் காலத்தில் வந்தது தான் என்றெல்லாம் கூறி வருகிறார். பிரச்சாரத்தின் போது அரவக்குறிச்சியில் தம்மை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு சென்னையில் இன்று நடந்த சினிமா விழா ஒன்றில் கமல் பேசியதாவது:

நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், எனக்கு அந்த அருகதை உண்டு. ஒரு முறை காந்தி ரயில் ஏறும் போது ஒரு செருப்பு தவறி விழுந்து விட்டது. ஒரு செருப்பை எடுப்பவனுக்கு பயன்படட்டுமே என்று தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி.

அது போல ஒரு செருப்பு வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது என்று கமல் பேசியுள்ளார். இந்து தீவிரவாதி என்று பேசியதால் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் பின் வாங்கப் போவதில்லை என்பதில் கமல் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

More News >>