பெங்களூருவில் காங். எம்எல்ஏ வீடு முன் குண்டு வெடிப்பு - ஒருவர் உடல் சிதைந்து உயிரிழப்பு!
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒரு வரின் வீடு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா என்பவரின் வீடு உள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் முனிரத்னா உள்ளார். இவரது வீட்டின் கார் பார்க்கிங் அருகே இன்று காலை திடீரென குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெங்கடேஷ் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். 45 வயதான வெங்கடேஷ் ஒரு சலவைத் தொழிலாளி என்று தெரியவந்துள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாரும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. உடல் சிதறி உயிரிழந்த சலவைத் தொழிலாளி வெங்கடேசுக்கும் இந்த குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.