அப்போ 20.. இப்போ 2000...! ஆர்.கே.நகர் பாணியில் அரவக்குறிச்சியிலும் டோக்கனா..? அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் புகார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார்.
இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில், அரவக்குறிச்சியில் காலை முதலே பெரும் சலசலப்பு நிலவினாலும் ஓட்டுப்பதிவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. திமுக தரப்பில் ரூ2 ஆயிரம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் காலையிலேயே புகார் வாசித்தார்.இர் நிலையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரோ, திமுகவினர் ஆர்.கே நகர் பாணியில் டோக்கன் வழங்குகின்றனர் என்று பகீர் தகவலை கூறியுள்ளார்.இது குறித்து அமைச்சர் விஜய செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுகவில் இருந்தபோது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டோக்கன் கொடுத்துப் பழகியவர் தான் தற்போதைய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. இப்போது அரவக்குறிச்சியிலும், திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் கொடுக்கின்றனர்.
மாலை 3 மணிக்கு டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் கூறி வருகின்றனர். .
அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை. மேலும் வாக்களிக்க விடாமல் பெரும்பாலான வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். தோல்வி பயத்தால், மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார்.