நாங்கள் என்ன கேலிப் பொருளா..? எங்களை விமர்சிக்க நீங்கள் யார்..? மீடியாக்கள் மீது எகிறிய கர்நாடக முதல்வர்
மே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி. எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்தக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதலே ஏகப்பட்ட நெருக்கடிகள் தான். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற ரீதியில் நாட்களை நகர்த்தி வருகிறது.
ஒரு பக்கம் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் அடிக்கடி போர்க்கொடி உயர்த்துவதும், மறுபக்கம் பாஜக தரப்பில் எடியூரப்பா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதுமான செயல்களில் ஈடுபடுவதால் எந்த நேரம் ஆட்சி கவிழுமோ? என்று ரீதியிலேயே குமாரசாமி ஆட்சி காலம் தள்ளி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பெரும் சரிவை சந்திக்கப் போகிறது. அத்துடன் தேவகவுடா குடும்பத்தின் ஆதிக்கம் ஒழியப்போகிறது. மே 23-க்குப் பிறகு மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் பாஜக வசம் செல்லப் போகிறது என்ற ரீதியில் அம்மாநிலத்தில் உள்ள மீடியாக்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் நிம்மதி இழந்துள்ள குமாரசாமி மீடியாக்களுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை கார்ட்டூன் சித்திரம் போல் கிண்டலடிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இப்படியே போனால் சட்டம் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டியது வரும் என்றெல்லாம் மீடியாக்கள் மீது குமாரசாமி மிரட்டல் தொனியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
களமிறங்கிய சோனியா! ஆட்சியை பிடிக்க முடியுமா?