அ.ம.மு.க. ஒன்றில் கூட வெற்றி பெறாதாம்! அ.தி.மு.க. வெல்லும் தொகுதிகள் எவை?
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 தொகுதிகளிலும், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. இறுதி கட்ட வாக்குப்பதிவு, 59 தொகுதிகளில் மே 19ம் தேதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் 6.30 மணிக்கு ஆங்கில சேனல்கள், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்டன. அவை கடைசியாக நடந்த 59 தொகுதிகளையும் சேர்த்து கணிப்பு வெளியிட்டன. அது எப்படி அரை மணி நேரத்தில் கருத்து கேட்டு கட்டம் போட்டு கணிப்பு வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை.
எல்லா டி.வி. சேனல்களும் சொல்லி வைத்தது போல் பா.ஜ.க. கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. அதே போல், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு 20 முதல் 34 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் அ.தி.மு.க.வுக்கு 4 முதல் 16 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. எல்லா சேனலுமே டி.டி.வி. தினகரனுடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி கூட போடவில்லை.
தமிழகத்தில் தனியாக கருத்து கணிப்பு நடத்திய தந்தி டி.வி.யும், அ.ம.மு.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவித்திருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கு பிறகு தந்தி டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை 19ம் தேதி இரவு வெளியிட்டது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் 11 ஆயிரத்து 700 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக அந்த டி.வி. தெரிவித்தது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கிட்டும் 19 தொகுதிகள்:
மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், கடலூர்கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, நீலகிரி, .
அ.தி.மு.க. வெற்றி பெறும் 6 தொகுதிகள்:
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனிதிருப்பூர்,
இழுபறியில் உள்ள 14 தொகுதிகள்:
கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரிமதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென் சென்னைதிருநெல்வேலி, புதுச்சேரி
இவ்வாறு தந்தி டிவி கணிப்பில் தெரிவித்துள்ளது. இந்த கணி்ப்புகளில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்று கூறப்பட்டிருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளதாக அந்த கட்சியினர் கூறிவந்த நிலையில், ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், எல்லா தொகுதிகளிலும் அமமுக மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் 8 முதல் 12 சதவீதம் ஓட்டு வாங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல், கமலின் ம.நீ.ம கட்சி 5 முதல் 8 சதவீத ஓட்டுக்களை பெறும் என்றும், அதை விட குறைவாக சீமானின் நாம் தமிழர் கட்சி 3 முதல் 5 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகளை பொறுத்து, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகக் கேள்வியும் எழுந்துள்ளது. தி.மு.க. திருப்பத்தை ஏற்படுத்துமா? அ.ம.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் மே 20ம் தேதி இரவு 9.30 மணிக்கு தந்தி டி.வி.யில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!