சிங்கப்பூர் சென்ற விமானத்தில் புகை - சென்னையில் அவசரமாக தரையிறங்கியது!
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் நிறுவனத்தின் தனியார் பயணிகள் விமானம் இன்று அதிகாலை திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானத்தில் 161 பயணிகளும், 9 ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பொருட்கள் வைக்கும் கார்கோ பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டறிந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்க அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு படையினரும், அவசரகால மீட்புப் படையிரைும் உஷார் படுத்தப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் நல்ல வேளையாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகளும், நிபுணர்களும் சோதனை நடத்தினர். புகை காரணமாக அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்ட விமானத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பின் இன்று மாலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மன்மோகனை நினைக்க வைக்கும் நரேந்திர தாமோதர் மோடி!